News Update :

அடேங்கப்பா... அகத்திய மலையில் இத்தனை அதிசயங்களா?

Written By Admin on Saturday, 8 October 2011 | 02:07

6,000 சதுர கி.மீ பரப்பளவு... 1,867 மீட்டர் உயரம்... 11 வகையான காடுகள்... மொத்தமுள்ள 177 ஊர்வன வகைகளில், 157 வகையான உயிரினங்கள் உலா வரும் இடம்... கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 260ல் 60க்கு மூலவித்து உயிரோடு இருக்குமிடம்... உலகிலுள்ள பூக்கும் மொத்த தாவரங்களான 5,640ல், 2,654 வகை தாவரங்களின் உய்விடம்... 600க்கு மேற்பட்ட மூலிகைகளை, 500 சதுர கி.மீ., பரப்பிற்கு மேல் மழைக்காடுகளை கொண்ட உலகின் ஒரே காடு...

தமிழக - கேரள எல்லையில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அகத்தியமலை குறித்து இப்படி நிறைய தகவல்கள். இத்தனை பெருமைகளையும் பெற்ற மூலிகைகளின் மூலஸ்தானமாக விளங்கும் அகத்திய மலையை, எளிதில் யாரும் பார்த்துவிட முடியாது. அனுமதி கிடைப்பதில் அத்தனை கெடுபிடிகள். இன்னும் கொஞ்ச நாட்களில், பூகோள பொக்கிஷமான அகத்தியமலை பற்றிய சுவாரசியதகவல்கள், தொலைக்காட்சி மூலம் வீட்டின் வரவேற்பறைக்கே வரப் போகிறது.அகத்தியமலை காடுகளையும், மலைகளையும், வீரியமான ஆபத்துகளையும் தன்னகத்தே கொண்டது. இங்கு மூன்று ஆண்டுகள் படப்பிடிப்பை நடத்தி, "ஓர் அருந்தமிழ் காடு' என்ற பெயரில் தயாரான சுற்றுசூழல் விழிப்புணர்வு பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன் ராம்.

படப்பிடிப்புக்காக நீண்ட பயணம்:

திரைப்படக் கல்லூரி மாணவர்கள், புகைப்படகாரர்கள், ஆதிவாசிகள் என 18 பேர் கொண்ட குழு இந்த படத்தின் பின்னணியில் இருக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், 100க்கும் மேற்பட்ட பறவை வகைகள், எண்ணற்ற தவளை இனங்களையும், 500 க்கும் மேற்பட்ட அரியமர வகைகள், 200க்கும் மேற்பட்ட மூலிகைகள் என, பல்லுயிரிகளின் அணிவகுப்புடன், இந்த பொக்கிஷ மலை படமாக்கப்பட்டுள்ளது. மக்களை சுற்றுச்சூழல் விழிப்புணர்வடைய செய்யும் நோக்கில், 2,500 கி.மீ., மேல் நடந்து, 2,000 க்கும் அதிகமான உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் படமாக்கப்பட்டுள்ளன.

பக்கத்தில் படுத்திருந்த ராஜநாகம்:

அகத்தியமலை குறித்த ஆவணப்படத்தை உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு, விளக்கமாய் பதில் கொடுத்தார் மோகன்ராம்.""இயற்கை மேல் இருந்த காதலால் வேலையை விட்டு விட்டு, 12 ஆண்டுகள் அகத்திய மலை குறித்து ஆய்வு செய்தேன். மனைவியின் நகைகளையும், சில நண்பர்களின் உதவியை வைத்தே இதில் இறங்கினேன். அகத்திய மலையின் சிறப்புகளை பதிவு செய்ய, அலைந்து திரிந்து செய்த ஆய்வுகளை, வனத்துறையினரிடம் காட்டிய பிறகே, தமிழக அரசின் ஒப்புதலை வாங்க முடிந்தது. படப்பிடிப்பின்போது, 25 கி.மீ., போனால் தான் கேமராவிற்கு சார்ஜ் போட முடியும். எங்களுக்கு உதவியாக காணி மக்கள் இருந்தனர். ஒரு முறை ஆந்தையை தேடி போகும்போது, எதிரில் குட்டி போட்டிருந்த புலியை பார்த்தோம். குட்டி புலியை கேமரா மின்ன வரவேற்றோம். அது அப்படியே இருந்தது தான் ஆச்சர்யம். இரவு படுக்கச் சென்ற குகையில், விடியும்போது தான் தெரிந்தது எங்களுடன் படுத்திருந்தது ராஜ நாகம்'' என தனது "த்ரில்' கலந்த அனுபவங்களை சொல்கிறார் மோகன்ராம்.

வரிவிலக்கு தராத அரசு:

அகத்திய மலையில் உள்ள உயிரிகளை பற்றி, பதிவு செய்ய மோகன்ராமுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், நாளொன்றுக்கு 2,000 ரூபாய் வரி விதித்தது.எத்தனையோ கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு, வரியை ரத்து செய்யும் அரசாங்கம், இது போன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிக்கு வரியை ரத்து செய்யவில்லை.இந்த படத்தை உருவாக்க, இதுவரை 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் மோகன்ராம். ஆனால், அரசு தொலைக்காட்சிக்கு மட்டும் தான், இந்த படத்தை கொடுக்கவேண்டும் என, சொல்லி அவரிடம் அரசு சார்பில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.இந்த படத்தை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப பணம் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், அரசு தொலைக்காட்சிக்கு பணம் செலுத்தி ஒளிபரப்பினால்தான், இந்த படம் எடுத்ததற்கான நோக்கமே நிறைவேறும். இல்லையென்றால், மக்களுக்கு இந்த அரிய மலை பற்றிய தகவல்கள் கிடைக்காமலே போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. "வனத்தையும், உயிரினங்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். மக்களுக்கும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும். இல்லாவிட்டால், உலகத்தில் உள்ள உணவு பஞ்சம், தண்ணீர் பஞ்சம் என பல பிரச்னைகளுக்கு சுற்றுச்சூழலே காரணமாக அமையும். இது மனிதன் மட்டும் வாழ்றதுக்கான இடம் இல்லை,'' என எச்சரிக்கும் மோகனுக்கு, 2007 ல் நடந்த ஓபன் பிரைன் சர்ஜரி காரணமாக, மாடிப்படி ஏறவே தடை விதித்திருக்கிறார், மருத்துவர். ஆனாலும், சுற்றுச்சூழல் மேல் உள்ள தீராத ஆசையால் தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கிறார், இந்த இயற்கையை விரும்பும் மனிதர்.

ஆய்வில் தகவல் தூக்கணாங் குருவிகள் இயற்கையாக கூடு கட்டும்

Written By Admin on Wednesday, 5 October 2011 | 10:51


தூக்கணாங் குருவிக்கு கூடு கட்டும் திறன் இயற்கையாகவே அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கணாங் குருவி எவ்வாறு கூடு கட்டுகிறது, வேறு எந்த முறையையும் அது பின்பற்றுகிறதா என்பது பற்றி எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். இது குறித்து பல்கலைக்கழக டாக்டர் பேட்ரிக் வால்ஸ் கூறுகையில், இனப்பெருக்க காலத்தின் போது கூடுகட்டத் தொடங்கும் தூக்கணாங் குருவிகள் கட்டும் ஒவ்வொரு கூடுகளில் வேறுபாடு தென்படுகின்றன. 

அவ்வாறாக சில குருவிகள் இடமிருந்து வலது புறமாகவும், சில வலமிருந்து இடது புறமாகவும் கூடு கட்டுகின்றன. தூங்கணாங் குருவிகள் ஒரே முறையில்தான் கூடு கட்டுகின்றன என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாங்கள் கண்ட காட்சியில் மாற்றம் தெரிந்தது. மேலும் குருவிகள் எந்தவொரு அனுபவமும் இல்லாமல் கூடு கட்டுகின்றன. இதற்கான திறன் தூக்கணாங் குருவிக்கு இயற்கையிலே அமைந்துள்ளது என்று வால்ஸ் தெரிவித்தார்.

''ஆன்டிபயாட்டிக்''

Written By Admin on Monday, 3 October 2011 | 05:08

''ஆன்டிபயாட்டிக்''?


பென்சிலினைக் கண்டறிந்தவர் அலெக்சாண்டர் பிளமிங்.இவர் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி.இவர் 1928-ல் முதன் முதலில் உயிருக்கு எதிரி என்ற கருத்தில் ''ஆன்டிபயாட்டிக்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.தனது ஆராய்ச்சிக்கூடத்தில், கிருமிகள் கண்ணாடிக் கிண்ணங்களில் எவ்வாறு வளர்கின்றன என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது,ஒரு கிண்ணத்தில் தானாக வளர்ந்திருந்த பூஞ்சையின் சுரப்பு நீர் மற்ற உயிரினங்களை அழித்துக் கொண்டிருப்பதை கண்டார்.

கிண்ணத்தில் தானாக வளர்ந்த பூஞ்சையின் பெயர்,'பெனிசிலியம் நொட்டேட்டம்'. இறந்து கொண்டிருந்த உயிரியின் பெயர்,'ஸ்டபைலோ கொக்கஸ்' என்ற பாக்டீரியா.பூஞ்சையில் இருந்து சுரந்த பெனிசிலின் என்ற வேதிப்பொருள் தான் பாக்டீரியாவை அழித்துக் கொண்டிருந்தது.இதை கண்டு கொண்டு,ஹாவர்டு ப்ளோரி,எர்னஸ்ட் செயின் என்ற இருவரும் 1940-ல் பெனிசிலினைத் தனிமைப்படுத்தி ஊசி மூலம் மருந்தாகப் பயன்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தனர்.

இதற்காகவே இவர்கள் இருவருக்கும் பிளமிங்குடன் சேர்ந்து 1945-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தெரிந்த கொசு,தெரியாத தகவல்கள்


கொசு கடித்து விட்டால் போதும்,''இந்த கொசுக்கடி தாங்க முடியலப்பா'' என்று எரிச்சலுடன் சொல்வோம்.உடனே கடித்த இடத்தில் சொரிய ஆரம்பித்து விடுவோம்.இதில் என்ன விசேஷம் என்றால்,பற்களே இல்லாத கொசு நம்மைக் கடிக்கிறது!.

கொசு கடித்ததும்,நாம் ஏன் சொரிகிறோம் என்று தெரியுமா?.

கொசுவிற்கு அதன் கண்களுக்கு கீழே ஊசி போன்ற ஆறு உறிஞ்சுக்குழல்கள் உள்ளன.இது மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சி விடுகிறது.பின்னர்,இந்த இரத்தம் உறைந்து போகாமல் இருக்க ஒரு ரசாயனப் பொருளையும் கடித்த இடத்தில் கொசு உமிழ்ந்து விடுகிறது.அதனால் தான் நமக்கு சொரிய வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

உலகில் சுமார் 2700 வகையான கொசுக்கள் உள்ளன.கொசு பறப்பதில் கில்லாடி.இது தலைகீழாக கூட பறக்கும்.மழை பெய்யும் போது ,மழைத்துளிகளின் இடையே நனையாமல் கூட பறக்குமாம்.பெண் கொசுக்கள் தான் கொடூரமானவை.ஆண் கொசுக்கள் சைவம்தான்.இவை புல்,தழை,பூக்களில் உள்ள தேனை மட்டுமே சாப்பிடுகின்றன.

பெண் கொசுக்களுக்கு முட்டைகளைப் பொரிக்க இரத்தம் தேவைப்படுவதால் தான் மனிதர்களின் இரத்தத்தை மோப்பம் பிடித்து உறிஞ்சுகின்றன.